Wednesday, April 11, 2012

Rama Vijaya - Chapter-14

ராம விஜயம் -- 14


மந்தரையின் யோசனை கைகேயிக்கும் மிகச் சரியாகப் பட்டது. அப்படியே செய்வதாகக் கூறி, அவளை அனுப்பிவிட்டு, தசரதன் வருவதற்குள், தனது ஆபரணங்களைக் கழற்றி வீசிவிட்டு, தலைவிரி கோலமாய் தரையில் படுத்தபடி, தன்னைத் தயார் செய்து கொண்டாள்.. சற்று நேரத்தில் அங்கே வந்த தஸரதன் அவளிருந்த நிலையைக் கண்டுப் பதறிப்போய், அவளருகில் சென்று, இதற்கான காரணத்தை வினவினான். அவனைக் கண்டதும், கைகேயி, ஆவேசத்துடன், 'ஏ கொடுமைக்கார ராஜாவே! போய்விடு இங்கிருந்து! உனது உள்மனத்தை நான் அறிந்து கொண்டேன். என் பிள்ளைகளைக் காட்டுக்குத் துரத்திவிட்டு, நீ ராமனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுக்கப் போகிறாய்' எனக் கூப்பாடு போட்டாள்.
அன்புடன் அவளைப் பார்த்த தஸரதன், 'கைகேயி, நீ சொல்லுவதில் துளிக்கூட உண்மையே இல்லை. ராம, லக்ஷ்மணர்களை நேசிப்பது போலவேதான், நான் பரத, சத்ருக்னர்களையும் நேசிக்கிறேன்' எனச் சமாதானம் செய்யப் பார்த்தான். அதைக் கேட்காதவள்போல, 'நான்தான் சொன்னேனே... இங்கிருந்து போய்விடு என்று. நீர் எனது இடத்தில் இருப்பதை நான் சற்றும் விரும்பவில்லை' என்று கத்தினாள். தனது அன்புக்குரிய மனைவி இப்படிப் பேசுவதைக் கண்டு கலங்கிப்போன தஸரதன் அவளைச் சமாதானப்படுத்த எண்ணி, அவள் வேண்டுவதைத் தருவாதாக மன்றாடினான்.
தஸரதன் இப்படிச் சொன்னவுடன், இதற்கெனவே காத்திருந்த கைகேயி, 'அப்படியானால், அசுரர்களுடன் போர் செய்தபோது, நீர் எனக்குக் கொடுத்த வரங்களை இப்போது நிறைவேற்ற வேண்டும். எனக்கு என்ன வேண்டுமென்றால், ராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்ப வேண்டும். என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்' எனச் சற்றும் தாமதிக்காமல் சொன்னாள்.
கைகேயியின் இந்தக் கொடுமையான வேண்டுதலைக் கேட்ட தஸரதன் இடி விழுந்தது போலானான். இவற்றைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேட்கச் சொல்லிக் கெஞ்சினான். ஆனால், கைகேயி அவனைப் பொருட்படுத்தவே இல்லை. தான் கேட்ட வரங்களிலேயே உறுதியாக நின்றாள்.
இந்தச் சமயத்தில் தஸரதனின் முக்கிய மந்திரியான ஸுமந்திரன், பட்டாபிஷேக ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருக்கும் செய்தியை அறிவிற்பதற்காக அங்கே வந்து, நிலை குலைந்து தரையில் வீழ்ந்து கிடக்கும் மன்னரைக் கண்டான். கைகேயியின் அரண்மனையில் நடந்த விஷயங்களை தஸரதன் அவனிடம் விவரித்தான். அதைக் கேட்ட ஸுமந்திரன் மிகவும் மனம் வருந்தி, ராமனை உடனடியாக அங்கு வரவழைத்தான்.
விரைந்துவந்த ராமன், என்ன நடந்தது? எனத் தந்தையிடம் வினவ, அப்போது கைகேயி,'ஒன்றுமில்லை ராமா. முன்னர் அசுரர்களுடன் நடத்திய யுத்தத்தின்போது அவர் எனக்குத் தந்த வரங்களை இப்போது தரச் சொல்லிக் கேட்டேன். அதிலிருந்து அவர் இப்படி வருத்தமாக இருக்கிறார்' என்றாள். அதைக் கேட்ட ராமன், 'அப்படியானால் நீங்கள் கேட்டதைத் தரமுடியாத மனநிலையில் அவர் இருக்கிறார் என நினைக்கிறேன் தாயே' என்றான். 'அப்படித்தான் நானும் நினைக்கிறேன்' என்றாள் கைகேயி, ஒன்றும் அறியாதவள் போல!
'என் தந்தையால் நீங்கள் கேட்டதைத் தர இயலவில்லை என்றால், அவற்றை நான் உங்களுக்குத் தருகிறேன் என வாக்களிக்கிறேன்' எனச் சற்றும் தாமதமின்றி ராமன் உரைத்தான். 'அப்படியானால், நீ தம்பி லக்ஷ்மணனை உடனழைத்துக் கொண்டு, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும்; என் மகன் பரதன் அரசாள வேண்டும்' எனக் கைகேயி பதிலுரைத்தாள். 'முழுமனதுடன் சம்மதிக்கிறேன் அம்மா. ஏனெனில் நானும், பரதனும் ஒருவரே' என மலர்ச்சியுடன் ராமன் சம்மதித்தான்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )


To Read the earlier Chapters Click on the nos given below
முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1    2    3    4    5
     6   7     8   9  10   11   12
13   14   15   16   17   18   19   20   21   22
23   24    25   26   27   28   29   30  31   32

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.