Wednesday, April 25, 2012

Rama Vijaya - Chapter- 26

ராம விஜயம்-- 26  
 

'மஹிஸாசுரனின் மகனான துதும்பி என்பவன் மிகவும் வலிமை வாய்ந்தவன். வானத்துத் தேவர்களையும், பூமியில் இருக்கும் மனிதர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தான். எவராலும் அவனோடு போரிட்டு வெல்ல முடியவில்லை. கடைசியாக, துதும்பி எமனிடம் சென்று, தன்னுடன் சண்டையிட்டுமாறு சவால் விட்டான். 'என்னால் உன்னுடன் சண்டை போட இயலாது. நீ கிஷ்கிந்தைக்குச் சென்று, அங்கிருக்கும் வாலியுடன், உன்னால் முடிந்தால் போரிட்டுப் பார்' என எமன் சொல்ல, அதன்படி, துதும்பியும் கிஷ்கிந்தை சென்று, வாலியை சமரிட அழைத்தான். கோபத்துடன் வெளியே வந்த வாலி, துதும்பியைக் கொன்று, அவனது உடலை வானத்தில் எறிந்தான். அது சென்று, ருஷ்யமுக பர்வதத்தில் விழுந்தது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் எல்லாரும் அந்த பருத்த உடலின் பாரம் தாங்க முடியாமல் மாண்டனர். அங்கிருந்த மாதங்கர் என்னும் முனிவர், கோபமடைந்து, வாலி இந்த மலைப் பக்கம் வந்தால், அவனுக்கு உடனடி மரணம் சம்பவிக்கும் எனச் சபித்தார். துதும்பியின் மகனான மாயாசுரன், தனது தந்தையைக் கொன்றவனைப் பழி வாங்கவென கிஷ்கிந்தைக்கு வந்தான். ஆனால், வாலியுடன் போரிட முடியாமல், அவன் கொடுத்த அடிகளின் வலி தாள முடியாமல், பாதாள லோகத்துக்கு ஓடி, அங்கே ஒரு குகைக்குள் ஒளிந்தான். வாலி அவனைப் பின் தொடர்ந்து சென்று, என்னை அந்தக் குகையின் வாசலில் காவலுக்கு நிற்கச் சொல்லிவிட்டு, குகைக்குள் நுழைந்தான். ஆனால், பல மாதங்கள் ஆகியும், அவன் திரும்பி வரவில்லை. அத்தனைக் காலமும் நான் அங்கேயே நின்று, காவல் காத்தேன். இந்தச் சமயத்தில், சில தேவர்கள் கிஷ்கிந்தைக்கு வந்து, அதைத் தங்கள் வசமாக்க முனைந்தார்கள். இதையறிந்த நான், ஒரு பெரிய பாறாங்கல்லை அந்தக் குகையின் வாசலில் வைத்து மூடிவிட்டு, கிஷ்கிந்தை சென்று, தேவர்களுடன் போரிட்டு அவர்களை முறியடித்தேன். இருபது மாதங்கள் ஆகியும், வாலி இன்னமும் வரவில்லை. அதனால், அவன் இறந்து விட்டான் என எல்லாரும் முடிவு செய்து, கிஷ்கிந்தையின் பிரஜைகள் அனைவரும், எனது விருப்பத்துக்கு மாறாக, என்னை அரசனாக்கினர். இதற்குள்ளாக, மாயாசுரனின் தலையுடன் வாலி குகையின் முகத்துக்கு வந்தான். அது மூடப் பட்டிருப்பதைக் கண்டு, மிரண்டு போய், இது என் வேலையாகத்தான் இருக்கும் என நினைத்து விட்டான். தனது வலிமையால், அந்தக் கல்லை அகற்றிவிட்டு, நேராகக் கிஷ்கிந்தைக்கு வந்தான். அரியணையில் நான் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதும், அளவில்லாத ஆத்திரம் அடைந்து, ' என்னைக் கொல்வதற்காக ஒரு பெரிய கல்லை குகை வாசலில் வைத்து அடைத்துவிட்டு, இங்கே என்னுடைய ராஜ்ஜியத்தை எடுத்துக் கொண்டாயே' எனக் கோபமாகச் சொல்லிக் கொண்டே என்னைத் தாக்கினான். ஆனால், நளன், நீலன், ஜாம்பவான், மாருதி ஆகியோரின் உதவியால், நான் அங்கிருந்து தப்பி, இந்த ருஷ்யமுக மலைக்கு வந்து, இங்கேயே வசிக்கத் தொடங்கினேன். ஏனெனில், வாலிக்கு இருக்கும் சாபத்தால், அவனால், இங்கு வர முடியாது என்பதே இதன் காரணம்' எனச் சொல்லி, அங்கே சிதறிக் கிடந்த துதும்பியின் உடலைக் காட்டினான். தனது கால் விரலால் அந்த உடலை அங்கிருந்து வெகு தூரத்துக்கு ராமன் எறிந்தான். 'இப்போது நீ ஒன்று செய். உடனே வாலியைப் போருக்கு அழை' என ராமன் சுக்ரீவனிடம் கூறினான். அதன்படியே, சுக்ரீவனும் கிஷ்கிந்தைக்குச் சென்று, வாலியைத் தன்னோடு போரிட அழைத்தான். வாலி கிளம்பியபோது, அவன் மனைவி தாரை தனது கணவனைப் பார்த்து, 'நீ இன்று சுக்ரீவனுடன் சண்டை போடச் செல்லாதே. அவன் வழக்கமாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்குத்தான் வருவான். ஆனால், இப்போதோ, சண்டையிட்டுத் தோற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் வருகிறான். அவனுடன் இப்போது சேர்ந்திருக்கும் ராம, லக்ஷ்மணர்களின் உறுதிமொழி அவனுக்குக் கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன். எனவே, நீ இன்றைக்கு சுக்ரீவனுடன் போரிடச் செல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்' என மன்றாடினாள். 'அது மட்டும் நடக்காது. நான் இன்று சுக்ரீவனின் தலையை வெட்டப் போகிறேன். அப்படியே நான் இறந்தாலும், நமது மகன் அங்கதன் உன்னைக் காப்பாற்றுவான்' எனச் சொல்லிவிட்டு, வாலி போருக்குச் சென்றான். சுக்ரீவனுடன் சண்டயிடும்போது, ஒரே பாணத்தால் ராமன் வாலியை வீழ்த்தினான். வாலியின் மனைவி தாரை ஓடி வந்து, அவன் உடலின் மீது விழுந்து அழும்போது, ராமன் அவளைத் தேற்றி, சுக்ரீவனை மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினான். முதலில் தயங்கிய தாரை, பிறகு அதற்குச் சம்மதித்தாள். மீண்டும் அரசனான சுக்ரீவன் [தனது மனைவி ருமை, புதிதாகக் கிடைத்த தாரை இருவருடனும்] சுகமாகக் காலத்தைக் கழிக்கலானான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and  uploaded by Santhipriya) 


To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.