Thursday, April 26, 2012

Rama Vijaya -Chapter- 28

ராம விஜயம் -- 28

 

கடலைக் கடந்து அந்தப் பக்கமும் சென்று தேட வேண்டுமென எல்லா வானரங்களும் துடித்தனர். ஆனால், அது அவர்களால் இயலவில்லை. ஆனால் மாருதி மட்டும் ராம நாமத்தை ஜெபித்துக்கொண்டே கடலைத் தாண்டக் கிளம்பினான். அப்படிச் செல்லும்போது, வழியில் அவனுக்குப் பல இடையூறுகள் நேர்ந்தன.
தேவர்கள் [அவனது வலிமையைப் பரிசோதிப்பதற்காக] பருத்த உடலுடைய ஒரு பெண்ணை அனுப்பினர். தனது வாயை அகலமாகத் திறந்துகொண்டு, அவள் அனுமன் செல்லும் வழியில் குறுக்கே நின்றாள். தனது திறமையால், அவளது வாய்க்குள் புகுந்து, மீண்டு வெளியே வந்து, தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
இதற்குள், கடலரசன் ஒரு பெரிய மலையை அனுப்பி, மாருதியின் பயணத்தைத் தடுக்க முயன்றான். 'ஏ நல்ல வானரமே! நீ ஏன் என் மடியின் மீது அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்லக்கூடாது?' என அந்த மலை அனுமனைக் கேட்டது. தனது காரியம் இப்படித் தடைபடுகிறதே எனக் கோபம் கொண்ட மாருதி, அந்த மலையை ஒரே அழுத்தில் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டு மேலே தொடர்ந்தான்.
இன்னும் சற்றுத் தொலைவு சென்றதும், ராஹு, கேது இவர்களின் தாயான ஸிம்ஹிகா என்னும் பூதம் மாருதியை விழுங்கி விட்டது. ஆனால் மாருதியோ அந்தப் பூதத்தின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து விட்டான். இப்படியாக எல்லாத் தடைகளையும் தாண்டி, இலங்கை வந்தடைந்தான்.
அவன் வந்த இடம் "மேல் இலங்கை"ப் பகுதி. அதைக் காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தெய்வம் மாருதியின் கால்களைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளியது. சட்டென எழுந்த மாருதி, ஓங்கி ஒரு குத்து விடவும், அதனால் நிலை குலைந்துபோன அந்தப் பெண் தெய்வம், தன் உயிரைக் காப்பாற்றுமாறு மாருதியை வேண்டிக் கெஞ்சியது. அதன் மீது இரக்கப்பட்டு, அவளை விட்டதும், அந்தக் காவல் தெய்வம் அவனை வாழ்த்தி, 'நீ எடுத்த காரியம் உனக்கு ஜெயமாகும்' என ஆசி வழங்கியது.
அங்கிருந்து கிளம்பி, கீழிலங்கைப் பகுதியான பூதலங்கைக்கு மாருதி சென்றான்.
இந்திரனால் கொல்லப்பட்ட கர்கர் என்பவனின் மனைவியான ஹவனா என்பவளின் தங்கையான க்ரோச்சா என்பவள் அதன் பொறுப்பாளியாக இருந்தாள். ஏதோ ஒரு வானரம் நகருக்குள் வந்திருக்கிறது என்னும் செய்தியறிந்த அவள், ஆயிரக்கணக்கான அரக்கர், அரக்கியரைக் கூட்டிக்கொண்டு, அதைப் பிடிக்கச் சென்றாள். அப்போது, மாருதி, தன் உடலைச் சிறியதாக்கிக் கொண்டு, ஒரு அழகிய மிருகமாக மாற்றிக் கொண்டான். அதைக் கண்ட க்ரோச்சா, 'இந்த மிருகம் மிகவும் அழகாக இருக்கிறது, இதை நான் சாப்பிட விரும்புகிறேன். இதைக் கொன்று, நல்ல ருசியாகச் சமைத்துக் கொண்டு வாருங்கள்' எனக் கட்டளையிட்டாள். 'எனது உடல் முழுவதும் நீரினால் ஆனது. எனவே என்னைச் சமைத்தால், உனக்கு ஒன்றுமே மிஞ்சாது. அதற்குப் பதிலாக, நீ என்னை அப்படியே உயிருடன் விழுங்கினால் மிகவும் சுவையாக இருக்கும்' என மாருதி பதில் சொன்னான்.
அதைக் கேட்டு மகிழ்ந்த அந்த அரக்கி, மாருதியைப் பிடித்துத் தன் வாய்க்குள் போட்டு விழுங்கினாள். நேராக அவளது இதயத்துக்குச் சென்ற மாருதி, அந்தத் தசையை பலமாக அழுத்திக் கசக்கினான். பொறுக்க முடியாத நெஞ்சுவலியால் தங்கள் தலைவி துடிப்பதைக் கண்ட அவளது சேடி அரக்கியர், அதற்கான மருந்தை, பன்றி மலத்தில் கலந்து அவளுக்கு ஊட்டினர். அந்த துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல், அந்த வானரம் தனது வாலை, அவளது மூக்கு, காதுகளின் வழியே நீட்டி ஆட்டியது. அந்த வால்தான் க்ரோச்சாவின் நோய்க்கான காரணம் என நினைத்து, ராக்ஷஸர்கள் அதைப் பிடித்து இழுக்கத் தொடங்கினர். அரக்கியின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்த மாருதி அவர்கள் அனைவரையும் கடலில் கொண்டு தள்ளினான்.
கீழிலங்கையிலிருந்து மீண்டும் மேலிலங்கைக்கு மாருதி திரும்பி வந்தான். சூரியன் மறைந்ததும், ராவணனின் மூத்த மகனான இந்திரஜித் என்பவன் தன் குடும்பத்துடன் வாழும் நிகும்பலை என்னும் நகருக்குள் புகுந்தான். நேராக இந்திரஜித்தின் அரண்மனைக்குள் புகுந்த அனுமன், அவனது அழகிய மனைவியான் ஸுலோசனை என்பவளுடன் இந்திரஜித் படுத்திருப்பதைக் கண்டான். அவர்களைக் கண்ட மாருதி,' நிச்சயம் இவள்தான் ஸீதையாக இருக்க வேண்டும். இந்தக் கொடிய அசுரன் மீது மையல் கொண்டு விட்டாளே' எனத் தனக்குள் சொல்லிக்கொண்டு, அவர்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்தான்.
அந்த சமயத்தில், ஸுலோசனை தன் கணவனைப் பார்த்து, ' இதென்ன உனது தந்தை இப்படி அநியாயமாக ஸீதையைக் கவர்ந்து வந்திருக்கிறாரே? அவளை மட்டும் உடனே அவளது கணவனிடம் ஒப்படைக்கா விட்டால், நிச்சயம் ஒரு பேரழிவு அவருக்குக் காத்துக் கொண்டிருக்கிறது' எனச் சொன்னாள். அதைக் கேட்ட மாருதி , இவள் ஸீதை இல்லையென சமாதானம் அடைந்தான்.
(தொடரும்)
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)



To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.