Saturday, April 28, 2012

Rama Vijaya - Chapter- 30


ராம விஜயம் -- 30
 

ஸீதையைக் கண்டுபிடித்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த அந்த வானரன், தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை அவளெதிரே எறிந்தான். அந்த மோதிரத்தைக் கண்ட ஸீதை, கண்களிலிருந்து கண்ணீர் வழிய, 'ஏ மோதிரமே, எங்கிருந்து நீ வந்தாய்? எனது ராமன் எப்படி இருக்கிறான்?' எனக் கேட்டாள். அவள் இப்படிக் கணையாழியிடம் கேட்டுக் கொண்டிருக்கையில், உறங்கிக் கிடந்க அரக்கியர் சிலர் அவளிடம் வந்து, 'சத்தம் போடாமல் இரு. இப்படிக் கத்தினால், நாங்கள் உன்னைக் கொன்று தின்று விடுவோம்' என அச்சுறுத்தினர். அதைக் கேட்ட மாருதி, தனது வாலால் அவர்களைச் சுருட்டி, தொலைவில் தூக்கி எறிந்தான். சிலர் அதில் மாண்டனர்; சிலர் பயந்தோடினர்.
பின்னர், அனுமன் ராமன் புகழைப் பாடினான். தனது செவிகளுக்கு இனிமையாக விழுந்த அந்தக் கானத்தைக் கேட்டதும், இதைப் பாடும் ஜந்து எதுவென ஸீதை தேடினாள். என்னெதிரே வா எனப் பலமுறை அழைத்தும், அது வராமல் போகவே, ஏமாற்றமுற்று, தன் உயிரை விடச் சித்தமானாள். அந்த நேரத்தில் அந்த வானரன் அவளெதிரே வந்து நின்றான்.
'யார் நீ? உனது பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?' என ஸீதை கேட்டாள். 'நான் ராமனின் சேவகன். உன்னைத் தேடியே இங்கு வந்தேன். உனது ராமன் நலமாக இருக்கிறார். இப்போது அவர் கிஷ்கிந்தையில் இருக்கிறார். விரைவிலேயே இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வார். நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் அரக்கன் அல்லன். வாயுவின் புத்திரன் நான். மாருதி என்பது என் பெயர்' என மாருதி பதில் சொன்னான்.
'நீ ராமனின் சேவகன்தான் என்பதற்கு இந்தக் கணையாழியைத் தவிர, வேறு ஏதாவது அடையாளம் உன்னிடம் இருக்கிறதா?' என் ஸீதை வினவினாள். அதைக் கேட்ட அனுமான், அவளுக்கு இதுவரையில் நிகழ்ந்த அத்தனைச் சங்கடங்களையும் விரிவாக எடுத்துரைத்தான். அதன் மூலம் இவன் ராமனின் சேவகனே என ஸீதை நம்பத் தொடங்கினாள்.
'இந்த இலங்கையை நாசமாக்கி இந்தக் கணமே நான் உன்னைக் கிஷ்கிந்தைக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், என் ராமன் எனக்கு அவ்வாறு கட்டளை இடவில்லை. இப்போது நான் மிகவும் பசியாக இருக்கிறேன். இந்த மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்து நான் தின்ன நீ அனுமதிப்பாயா?' என்றான் மாருதி.
'இந்தப் பழங்களைப் பறித்துத் தின்னச் சொல்லும் அதிகாரம் எனக்கில்லை. அப்படி நீ தின்றால், ஒருவேளை இந்த அரக்கர்களும், அரக்கியர்களும் உன்னைக் கொன்றாலும் கொல்லலாம். இருப்பினும், இதோ கீழே விழுந்து கிடக்கும் இந்தப் பழங்களை நீ பொறுக்கி உனது உணவாகக் கொள்ளலாம். ஆனால், மரத்திலிருந்து மட்டும் உனது கை, கால்களால் பறிக்காதே' என ஸீதை அனுமதித்தாள்.
'நீ சொன்னது போலவே நான் எனது கை, கால்களை உபயோகித்து இந்தப் பழங்களைப் பறிக்க மாட்டேன் என உனக்கு வாக்குறுதி தருகிறேன். கீழே கிடக்கும் பழங்களை மட்டும் சாப்பிடுகிறேன்' என மாருதி சொல்லிவிட்டு, தனது வாலை நீட்டி, அதன் மூலம் அங்கு விழுந்து கிடந்த பழங்கள் அனைத்தையும் திரட்டி உண்டான். அடுத்த சில நிமிடங்களில் அந்த அசோக வனத்தையே நாசமாக்கினான். அந்த வனத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த ஐந்து கோடி அசுரர்களும் இந்தச் செயலைக் கண்டு, அனுமனைத் தாக்குவதற்காக ஓடி வந்தனர். அவர்களைத் தனது வாலால் சுழற்றி வீசியெறிந்தான் மாருதி. பலர் மாண்டு போயினர்; எஞ்சிய சிலர் ஓடி ஒளிந்தனர்.
இந்தச் செய்தியைக் கேட்ட ராவணன் கோபமுற்று வலிமை மிகுந்த எண்ணாயிரம் வீரர்களை அங்கே அனுப்பினான். அவர்களையும் இதேபோலத் தனது வாலால் சுழற்றிக் கொன்றான். ஆத்திரமடைந்த ராவணன் மேலும் ஒரு லட்சம் அசுரப் படையை அனுப்ப, மாருதி அவர்களை எல்லாம் தனது வாலில் கட்டிக் கடலுக்குள் வீசினான். தனது மகன் அக்ஷயனை ஒரு பெரிய படையுடன் ராவணன் அனுப்ப அவனும், இதர குமாரர்களும் அனுமன் கையால் மாண்டனர். உடனே, பத்தாயிரம் யானைகள் பலம் கொண்ட ஆசாலி என்னும் கொடிய பெண்ணரக்கியை ராவணன் அனுப்பினான். ஒரு யோஜனை அளவுக்குத் தன் வாயை நீள, அகலத்தில் திறந்துகொண்டு, அனுமனை அப்படியே அவள் விழுங்கினாள். ஆனால், அவளது வயிற்றைக் கிழித்துக்கொண்டு அந்த வானரன் வெளியே வந்தான்.
இறுதியில், தனது மகன் இந்திரஜித்தை ஒரு படையுடன் ராவணன் அனுப்பினான். வலிமை வாய்ந்த அம்புகளை இந்திரஜித் எறிய, அவற்றையெல்லாம் தனது கரங்களால் ஒடித்துப் போட்டு விட்டான் மாருதி. தனது வாலால் அவனது மகுடத்தைத் தள்ளிவிட்டு, அவனது தேரைப் பொடிப்பொடியாக்கினான். அவனது குதிரைகளையும் கொன்றுவிட்டான். பிறகு, ஒரு பெரிய இரும்புலக்கையை எடுத்துக்கொண்டு, மாருதி அங்கிருந்த அசுரப் படைகளை தாக்கினான். அப்போது ஒரு சுருக்குக் கயிற்றால் அனுமனைப் பிடிக்க இந்திரஜித் முயற்சிக்க, தன் உடலை ஒரு எள்ளளவிற்குக் குறுக்கிக் கொண்டு, ஒவ்வொரு முறை அந்தக் கயிற்றை வீசும்போதும் அதிலிருந்து தப்பினான். அதைக் கண்ட இந்திரஜித், ஒரு சிறிய சுருக்குக் கயிற்றால் அனுமனைப் பிடிக்க முயற்சி செய்ய, அப்போது தன்னை மிகப் பெரிய உருவாக்கிக் கொண்டு, அதைப் பிய்த்தெறிந்தான். இதனால் கோபமுற்ற இந்திரஜித் அவனோடு நேருக்கு நேராக மல்யுத்தம் செய்ய, ஒரே அடியில் அவனை அனுமன் தரையில் தள்ளி வீழ்த்தினான்.
'இந்த வானரத்திடம் மாட்டிக் கொண்டால், அது தன்னைக் கட்டியிழுத்து ராமனிடம் கொண்டு சேர்த்துவிடும். அங்கே என்னை மிகவும் மோசமாக நடத்துவார்கள்' எனப் பயந்துபோன இந்திரஜித், ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அந்தக் குகையின் வாசலை ஒரு பெரிய கல்லால் அனுமன் மூடி விட்டான். உள்ளே சிக்கிக் கொண்ட இந்திரஜித் அவமானத்தால் அழுது கதறினான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 


To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.