Monday, April 30, 2012

Rama Vijaya - Chapter-32


ராம விஜயம் -- 32
 

தரையில் விழுந்து புரண்டு, தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் தனது வாலினால், அரக்கர்களின் மீசை, தாடிகளையும், அரக்கியரின் தலைமயிரையும் மாருதி சுட்டெரித்தான். அவர்களில் பலபேரையும் சாகடித்தான். விரைவிலேயே இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இப்படி இலங்கை பற்றியெரிந்து கொண்டிருக்கையில், அசோக வனத்திற்குச் சென்று, ஸீதையை மீண்டும் கண்டு, 'உனது கணவர் விரைவிலேயே வந்து உன்னைக் கூட்டிச் செல்வார்' என அந்த வானரன் தைரியம் கொடுத்தான். அவளிடமிருந்து ஒரு ஆபரணத்தை அடையாளமாகப் பெற்றுக்கொண்டு, மாருதி பம்பை தீரத்துக்கு வந்து, ராமனடி பணிந்தான். இலங்கையில் இந்த வானரம் செய்த நிகழ்வுகளின் விவரங்களை பிரம்மதேவரிடமிருந்து எழுதி வாங்கிக்கொண்டும் வந்திருந்தான். அதில் இலங்கை தீக்கிரையானது குறித்தும், அதில் மூன்றில் ஒரு பகுதி தங்க மயமாக ஆனது பற்றியும் குறிப்பிட்டிருந்தது. ராம, லக்ஷ்மணர்கள் மாருதி செய்த இந்தத் தீரச் செயலைக் கேட்டு மகிழ்ந்து அவனைப் பாராட்டினர்.

இலங்கை தங்கமயமான கதை:
"சகோதரகளான இரு அந்தணர்கள் எப்போதும் தக்ஷிணை பெறும் விஷயத்தில், தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களது இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பிய அவர்களது தந்தை, இருவரையும் மிருகங்களாகிப் போகுமாறு சபித்து விட்டார். கிருஷ்ண [விஷ்ணு] பகவான் மூலம் சாபவிமோசனம் கிடைக்கும் எனவும் சொல்லியிருந்தார். ஒருவன் முதலையாகவும், மற்றொருவன் கஜேந்திரன் என்னும் யானையாகவும் மாறினர். முதலை ஒரு குளத்திலும், யானை ஒரு மலையிலுமாக வாழ்ந்து வந்தன. ஒருநாள் தற்செயலாக, கஜேந்திரன் அந்த முதலை வசிக்கும் குளத்துக்கு நீரருந்த வந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென அந்த முதலை யானையின் காலைக் கவ்வி நீருக்குள் இழுத்தது. அவ்விருவருக்கும் இடையே கடும் போராட்டம் நிகழ்ந்தது.
கஜேந்திரனைக் கடுமையாகத் தாக்கிய முதலை அதைக் கொல்லும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போது, அந்த யானை கிருஷ்ணனை வேண்டிக் கதறி ஓலமிட்டது. அந்தப் பிரார்த்தனையைச் செவிமடுத்த ஆண்டவன், கருடன் மீதேறி அந்த குளத்தருகே வந்தான். தனது பரம பக்தனான கஜேந்திரன் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா, அந்த முதலையை அப்போதே கொன்று, யானையை அதன் பிடியிலிருந்து விடுவித்தார். இருவருக்கும் சாப விமோசனமும் கிடைத்தது.
அதன் பிறகு, தனது இருப்பிடத்துக்குச் செல்வதற்காகக் கிருஷ்ணன் கிளம்பும்போது, தான் மிகவும் பசியோடிருப்பதால் சாப்பிட தனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் எனக் கருடன் கேட்டது. 'எனது பயணத்தை கொஞ்ச நேரத்திற்கு ஒத்திவைக்கிறேன். நீ அதற்குள் சென்று அதோ அங்கு வீழ்ந்து கிடக்கும், அந்த முதலை, யானைகளின் உடல்களைத் தின்றுவிட்டு வா' எனக் கிருஷ்ணன் அனுப்பினான்.
அதன்படியே மாமிசங்களைத் தனது அலகில் கவ்விக்கொண்டு, அவற்றை உண்பதற்காக அருகிலிருந்த நாவல் மரத்தில் சென்றமர்ந்தது. அப்படிச் சென்று அமரும்போது, அதன் எடையைத் தாங்க முடியாமல், அந்தக் கிளை ஒடிந்து விழுந்தது. அதில் லட்சக்கணக்கான ரிஷிகள் அமர்ந்து தியானத்தில் இருப்பதையும், கிளை விழுந்தால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பேரழிவையும் உணர்ந்த கருடன், தன் அலகினால் அது தரையில் விழாமல் அதைக் கவ்விக்கொண்டது.
அப்படிக் கவ்விய அந்தக் கிளையை எங்கே வைப்பதெனத் தெரியாமல், நேராகத் தனது தந்தையான கஸ்யப முனிவரிடம் சென்று முறையிட்டது. கஸ்யபரும் மனமிரங்கி, அந்த ரிஷிகளைக் கீழே வருமாறு அழைப்பு விடுக்க, அதன்படியே அவர்களும் பூமிக்கு இறங்கி வந்தனர். பின்னர், அந்தக் கிளையை இலங்கையில் இருக்கும் ஒரு மலையின் மீது வைத்துவிடுமாறு கஸ்யபர் கருடனிடம் சொன்னார். அப்படியே செய்துவிட்டு, கருடன் புறப்பட்டுச் சென்றது.
மலை மீதிருந்த அந்தக் கிளை, தங்கமாக மாறியது. மாருதி இலங்கையை எரித்தபோது, அந்தத் தங்கம் உருகி வழிந்தோடி, இலங்கையின் ஒரு பகுதியைப் பொன் மயமாக்கியது."
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.