Tuesday, May 1, 2012

Rama Vijaya _ Chapter- 33


 ராம விஜயம் -- 33
 

உடனடியாக, இலங்கைக்குப் படையெடுக்க ராம, லக்ஷ்மணர்கள் ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். தஸரா புண்ணிய நாளன்று, 18 பத்மம் [ஒரு பத்மம் என்பது சுமார் 10 பில்லியன்கள்] வானரர்களுடனும், ஜாம்பவான் என்னும் ஒரு வயது முதிர்ந்த வானரத்தின் தலைமையில் 72 கோடி வீரர்களுடனும், 56 கோடி இதரவகைக் குரங்குகளுடனும் போருக்குக் கிளம்பினார்கள். மாருதி முதலில் கிளம்பிய சமுத்திரக் கரையருகே சென்றதும், அங்கிருந்து மேலே செல்ல இயலாமல், அங்கேயே முகாம் அமைத்தனர். இலங்கை முழுவதும் பரவிய இந்தச் செய்தியைக் கேட்ட விபீஷணன் [ராவணனின் இளைய சகோதரன்], ஸீதையை உடனே அவளது கணவனிடம் ஒப்படைத்துவிட்டு, அனைத்து தேவர்களையும் விடுதலை செய்யுமாறு தன் அண்ணனிடம் சென்று கோரினான். 'என் பேச்சை நீ கேட்காவிட்டால், இலங்கை முழுவதுமே நாசமாகி, அனைத்து அரக்களும் அழிந்து போய்விடுவார்கள்' என்றான். ராவணனும், அவனது மகன் இந்திரஜித்தும், 'நாங்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ராமன் எத்தனைக் குரங்குகளுடன் வேண்டுமானாலும் இங்கு வரட்டும். ஒரே நொடியில் அவர்களை எல்லாம் கொன்று விடுவோம்' என ஆணவத்துடன் பதில் சொன்னார்கள்.
ஸீதையை ராமனுடன் சேர்க்க முடியவில்லையே; தனது சகோதரனைத் திருத்த முடியவில்லையே என வருந்திய விபீஷணன், இனியும் அங்கிருப்பது சரியல்ல என முடிவு செய்து, நம்பிக்கையான நான்கு அசுரர்களை உடனழைத்துக் கொண்டு, வானரங்கள் தங்கியிருந்த முகாமுக்கு வந்து, இளவரசனைக் காண அனுமதி வேண்டினான். [எதிரிகள் என நினைத்து] அவர்களைக் கொல்ல வானரங்கள் முனைய, விபீஷணன், 'நான் ராவணனின் இளைய தம்பியான விபீஷணன். ராமனைக் காணவேண்டி இங்கு வந்திருக்கிறேன். வாலியைக் கொன்று, சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தைத் தந்ததாகக் கேள்விப்பட்டேன். அதேபோல, ராவணனைக் கொன்று, இலங்கையை எனக்கு ராமன் அளிக்க வேண்டுமென விரும்புகிறேன். ராவணன் கொடியவன். தேவர்களையும், மறையோர்களையும் அவன் துன்புறுத்துகிறான்' என விண்ணப்பித்தான்.
அவனைச் சந்தேகத்துடனேயே பார்த்து, வானரங்களில் யாரும் முதலில் அவன் சொன்னதை நம்பத் தயாராக இல்லை. அப்போது, மாருதி, அவர்களைப் பார்த்து, ' விபீஷணன் ஒன்றும் மற்ற அசுரர்களைப் போலக் கொடியவன் அல்லன். அவன் ராம பக்தன். ஒரு நல்ல எண்ணத்துடன்தான் இங்கே வந்திருக்கிறான்' எனச் சமாதானப் படுத்தினான். அதைக் கேட்டதும், ராமனும் விபீஷணனைத் தன்னை வந்து சந்திக்க அனுமதிக்குமாறு வானரங்களுக்குக் கட்டளையிட்டான். சுக்ரீவன் சென்று, விபீஷணனை அழைத்து வந்தான். ராமனின் அடிபணிந்து வணங்கிய விபீஷணனை வரவேற்று, 'சந்திர சூரியர்கள் உள்ளளவும், இலங்கையை நீயே ஆளுவாய் என உறுதி தருகிறேன்' என ஆசி கூறினான்.
பின்னர், விபீஷணனைப் பார்த்து, இவ்வளவு பெரிய வானரப் படையுடன் எப்படி இந்தக் கடலைத் தாண்டுவது?' எனக் கேட்டான். 'கடலரசனை வேண்டுங்கள். அவன் வந்து உங்களுக்கும், இந்த வானரங்களுக்கும் வழி தருவான்' என விபீஷணன் யோசனை சொன்னான். ராமன் சமுத்திர ராஜாவைக் குறித்துப் பிரார்த்தனை செய்யச் செல்ல, விபீஷணன் இலங்கைக்குத் திரும்பினான்.
ஷார்தூலா என்னும் அசுரன் ராவணனிடம் வந்து 'சுக்ரீவனின் தலைமையில் ஒரு மிகப்பெரிய வானரப்படை வரப்போகிறது; கடலுக்கு அக்கரையில் அவர்கள் முகாமிட்டிருக்கின்றனர்; இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் இலங்கைக்குள் வந்துவிடுவார்கள்' என்னும் தகவலைச் சொன்னான். அதைக் கேட்டதும், ராவணனால் ஏவப்பட்ட சுகன் என்னும் அசுரன், சுக்ரீவனிடம் வந்து, ' ராமன் ஒரு கொடிய மனிதன். நீ ஏன் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறாய்? உனக்கும், ஸீதைக்கும் என்ன சம்பந்தம்? பேசாமல் உனது படையுடன் திரும்பிச் சென்றுவிடு. என் பேச்சைக் கேளாவிட்டால், உனது வானரங்களின் தலைகளெல்லாம் வெட்டப்படும். நீயும், ராம, லக்ஷ்மணர்களும் கொல்லப்படுவீர்கள்' என அச்சுறுத்தினான்.
அதைக் கேட்ட வானரங்களெல்லாம் வெகுண்டு, அந்த அசுரனைப் பலமாகத் தாக்க, அப்போது லக்ஷ்மணன் குறுக்கிட்டு, அந்த அசுரனை விடுவிக்கச் சொன்னான். 'நீங்கள் எல்லாம் முட்டாள் குரங்குகள். சீக்கிரமே இங்கு சாகப் போகிறீர்கள்' என சுகன் மீண்டும் சொல்ல, அங்கிருந்த ரஷபன் என்னும் வானரன், அவனைப் பார்த்து, 'நீ போய் ராவணனிடம் ஸீதையை உடனடியாக விடுவிக்குமாறு சொல். இல்லையேல், அவனது பத்துத் தலைகளும் வெட்டி வீழ்த்தப்படும் எனவும் சொல்.' என்றான். 'நாவை அடக்கு. ஸீதை ராமனிடம் திரும்பவும் சேர்க்கப் படுவாள் என்பது ஒருபோதும் நடவாத காரியம். நான் மீண்டும் சொல்கிறேன், இந்த ராஜகுமாரனை விட்டு சீக்கிரமே அகலுங்கள். என் பேச்சைக் கேட்காவிட்டால், உங்களது நாட்கள் எண்ணப்பட்டு விட்டன எனக் கொள்ளுங்கள்' எனத் திமிராக சுகன் பேச, ஆத்திரமுற்ற வானரங்கள் அவனை நையப் புடைத்து, அவனை ஒரு கயிற்றால் கட்டிப் போட்டனர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 



To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.