Tuesday, May 1, 2012

Rama Vijaya - Chapter-34

ராம விஜயம் -- 34
 

ஒரு கவளம் சோறு கூட உண்ணாமல் மூன்று நாட்கள் ராமன் கடலரசனைக் குறித்துப் பிரார்த்தித்தான். ஆனால் சமுத்திர ராஜா அவற்றைக் கேளாமல் அலட்சியப் படுத்தினான். சினங்கொண்ட ராமன், அந்தக் கடலையே அழித்து வற்றச் செய்துவிடுவதற்கென தனது வில்லை எடுத்தான். அதைக் கண்டு பயந்து நடுங்கிப்போன ஸமுத்திரராஜன், 'தயவு செய்து என் பிழையை மன்னித்துவிடு ராமா. என்னை வற்றச் செய்துவிட வேண்டாம். நீ என்ன சொன்னாலும் அதைச் செய்யக் காத்திருக்கிறேன்' எனக் கெஞ்சினான்.
'நல்லது, மன்னித்தேன். ஆனால், நான் இப்போது தொடுத்துவிட்ட இந்த பாணத்தை என்ன செய்வது? 'அழிக்க வேண்டுமென சங்கல்பம் செய்து நாணேற்றித் தொடுத்துவிட்ட இந்த பாணத்தின் முடிவை என்னாலும் மாற்ற இயலாதே' என ராமன் கேட்டான். ''மரு' என்னும் அரக்கன் ஒருவன் இந்தக் கடலின் மேற்குப் பகுதியில் இருந்துகொண்டு, இந்தக் கடலிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் கொன்று தின்று கொண்டிருக்கிறான். தயவு செய்து இந்த பாணத்தை அவன் மீது ஏவி, அவன் தலையைக் கொய்து விடு' என சமுத்திர ராஜன் கேட்டுக்கொள்ள, அதன்படியே, ராமனும் அந்தப் பாணத்தை எய்து அந்த அசுரனின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
அந்தத் தலை விழும்போது, கடலின் ஒரு பகுதி நீரை அது குடித்து அந்த இடத்தின் ஆழத்தைக் குறைத்துக் காட்டியது. அதனல் அங்கே ஒரு நீர்ப்பாதை தென்பட்டது. இந்த தீரச் செயலை செய்த ராமனைத் தனது மருமகனாகப் போற்றி, அவனுக்கு விலையுயர்ந்த பட்டு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் கடலரசன் அளித்தான். கூட இருந்த வானரங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, ராமன் அவற்றைப் பெற்று அணிந்து கொண்டான். அந்தக் கோலத்தில் அவன் மிகவும் அழகுடன் திகழ்ந்தான்.
'இந்த இடத்திலிருந்து, இவ்வளவு வானரப் படைகளுடன் நான் எப்படி அக்கரை செல்வது?' என ராமன் கேட்க, 'இதன் மீது கற்களாலும், மலைகளாலும் ஒரு ஸேதுவை [பாலத்தைக்] கட்டி, அதன் மீது நடந்து, அக்கரை செல்லலாம். அந்தப் பாலத்தை நளன் என்னும் வானரனின் கைகள் மூலம் கட்டச் செய். அப்போதுதான் அந்தப் பாறைகள் நீரில் மூழ்காமல், மிதக்கும். நளன் சிறுவயதினனாக இருக்கும்போது, ஸாலிக்ராமங்களை அன்றாடம் வழிபட்டு, அவற்றைக் கடலில் எறிவான். அதைக் கண்டு மகிழ்ந்த ஒரு முனிவர், அவன் கைகளால் எறியப்படும் கற்கள் நீரிலும் மிதக்கும்' எனும் ஒரு வரத்தைத் தந்திருந்தார்.' என கடலரசன் யோசனை சொல்லிவிட்டு, கடலுக்குள் சென்று மறைந்தான்.
உடனே ராமன், நளனை அழைத்து, ' இந்தக் கடலைத் தாண்ட நாம் கற்களாலும், மலைகளாலும் ஆன ஒரு ஸேதுவைக் கட்ட வேண்டும். அந்தப் பாறைகள் கடல் நீரில் மிதக்க வேண்டும். அதை உன் கைகளால் மட்டுமே செய்ய இயலும். எனவே, நீ இதர வானரங்களை அழைத்து, கற்களைக் கொண்டுவரச் செய்து, அவற்றை உன் கைகளாலேயே கட்ட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்' எனச் சொன்னான்.
இதைக் கேட்ட நளனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னால் தவிர வேறு யாராலும் இந்த ஸேதுவைக் கட்ட முடியாது எனக் கர்வம் கொண்டான். வானரங்களை அழைத்து அதற்கான கற்களைக் கொண்டுவந்து தன்னருகே அடுக்கச் சொல்லிக் கட்டளை இட்டான். அவ்வாறே, வானரங்களும் கொண்டுவந்து நளனருகே குவித்தன. நளன் அவற்றால் பாலம் கட்டத் தொடங்கினான். ஆனால், அவன் கட்டிக்கொண்டிருந்த பாலத்தை அங்கிருந்த மீன்கள் உடனே தின்றுவிட்டன. என்ன செய்வதெனத் தெரியாது நளன் திகைத்தான்.
அப்போது மாருதி அவனிடம், 'கர்வமே பேரழிவின் ஆரம்பம். நீயின்றி இந்தப் பாலத்தைக் கட்ட முடியாது எனக் கர்வம் கொண்டாய். இப்போது என்ன சொல்கிறாய்? உனது கர்வத்தை விட்டொழித்து, பணிவைக் கைக்கொள். ராமனின் பெயரை அந்தக் கற்களின் மீது எழுதி, ஒவ்வொன்றாகக் கடலில் இடு. இப்படிச் செய்தால், மிகக் குறைந்த நேரத்திலேயே, உன்னால் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும்' எனச் சொன்னான்.
அவன் சொன்னது போலவே நளன் செய்ய, நூறு யோஜனை நீள, அகலத்தில் ஸுவேலா என்னும் இடம் வரைக்கும் ஸேது எந்தத் தொந்தரவும் இல்லாமல் கட்டப் பட்டது. அப்படிக் கட்டப்பட்ட ஸேதுவின் மீது நடந்து, தானும் தனது படைகளுடனும் ராமன் கடலைக் கடந்து ஸுவேலா சென்றடைந்து அங்கே ஒரு முகாம் அமைத்துத் தங்கினான்.

[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.