Friday, May 4, 2012

Rama Vijaya - Chapter- 36

ராம விஜயம் -- 36
 


இந்த நேரத்தில், விபீஷணனின் மனைவியான ஸர்மா என்பவள் அசோக வனத்துக்கு வந்து, ராமன் நலமுடன் இருக்கிறான் எனவும், ராவணன் காட்டிய தலை மந்திர, தந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் சொல்லி, அதன் மூலம் அவள் மனதை மாற்றச் செய்த முயற்சியே எனத் தெளிவாக்கினாள். அவள் அப்படிச் சொன்ன அந்தக் கணமே, அங்கிருந்த அந்தத் தலையும், வில்லும் மறைந்து போயின.
அரண்மனைக்குத் திரும்பிய ராவணன், தனது மனைவி மண்டோதரியை அழைத்து, 'மண்டோதரி, நீ எனது நம்பிக்கையான மனைவி. நீ என்னை மிகவும் விரும்புகிறாய். ஆனால், எனக்கோ இந்த ஸீதையின் மீது மையல் பிறந்திருக்கிறது. நீ மட்டும் இந்த நேரத்தில் எனக்கு உதவவில்லை என்றால், நான் இறந்தே போவேன். நீ என்னை விரும்புவது உண்மையானால், அசோகவனம் சென்று, ஸீதையைக் கண்டு, அவள் மனதை மாற்றி என்னை மணக்குமாறு செய்' என வேண்டினான். வேறு வழியின்றி, மண்டோதரியும் அசோக வனம் சென்று, ஸீதையிடம் தனது கணவனின் ஆசைகளைச் சொல்லிவிட்டு அந்தப்புரம் திரும்பி, ராவணனைப் பார்த்து, 'அன்புக்குரியவனே, ஸீதை ஒன்றும் உனது விருப்பத்துக்கு இணங்குவாள் எனத் தோன்றவில்லை. அவள் சிறந்த பண்புகளின் உறைவிடம். உனது ஆசைக்கு இணங்குவதைக் காட்டிலும், அவள் உயிரை விடவும் தயங்க மாட்டாள். நீ அவள் பின்னால் அலைவது இன்னமும் சரியில்லை. எனவே, அவளை இப்போதே ராமனிடம் ஒப்படைப்பதே நல்லதென நினைக்கிறேன். இன்னொருவன் மனைவி மீது நீ ஏன் ஆசைப்படுகிறாய்?' என்றாள்.
அதைக் கேட்ட ராவணன்,' என் அன்பே, நீ சொல்வது மிகவும் சரியே. ஆனால், இனிமேல் ஸீதையை மீண்டும் ராமனிடம் தந்து, அனைவர் முன்னாலும் அவமானப்பட நான் தயாராக இல்லை. அவனுடன் சண்டையிட்டு மடிந்தாலும் மடிவேனே தவிர, ஸீதையை அவனிடம் ஒப்படைக்க மாட்டேன்' என்றான்.அவன் மனதை மாற்ற முடியாமல், வருத்தத்துடன் மண்டோதரி உள்ளே சென்றாள்.
ராவணன் தனது சக மந்திரிகளுடன் மீண்டும் அரண்மனையின் மேன்மாடத்துக்குச் சென்று, ராமனின் படைகளைப் பார்வையிட்டான். ராமனும் அதே சமயம் சுக்ரீவனுடனும், இதர சில வானரங்களுடனும் ஒரு சிறிய குன்றின் மீதேறி, ராவணனைப் பார்த்தான். ராவணன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, சுக்ரீவன் அந்தக் குன்றிலிருந்து பாய்ந்து அவனது பத்துத் தலைகளிலிருந்த மகுடங்களைக் கீழே தள்ளிவிட்டுத் திரும்பினான்.
திடுக்கிட்ட ராவணன், சட்டென்று சமாளித்துக்கொண்டு, அந்த வானரத்துடன் சண்டையிட்டான். ஆனால், சுக்ரீவன் பலத்த குத்துகளை விட்டு, ராவணனை வருத்திவிட்டுத் தன் இருப்பிடத்துக்குச் சந்தோஷமாய்த் திரும்பினான். மிகவும் பயந்துபோன ராவணன் அவமானத்துடனும், குழப்பத்துடனும் கீழிறங்கிச் சென்றான்.
போருக்கான எல்லா நடவடிக்கைகளும் இருதரப்பிலும் செய்தபின்னர், விபீஷணன் ராமனிடம், 'ஒரு தாக்குதலைத் தொடங்கும் முன்னர், சமாதானத்துக்காகத் முயற்சி செய்வது நல்லது. எனவே நீங்கள் இப்போது ஒரு தூதனை என் அண்ணனின் சபைக்கு அனுப்பி, ஸீதையைத் திருப்பி ஒப்படைக்குமாறு கேளுங்கள்' என ஆலோசனை சொன்னான். அதற்கு ஒப்புக்கொண்ட ராமன், அங்கதனைத் தூதனாக அனுப்பி வைத்தான்.
ஆனால், அரசவையில் யாரும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதைக் கண்டு கொதித்துப்போன அங்கதன், 'ராவணா, நான் யாரென்று தெரியுமா?' எனக் கத்தினான். 'யார் நீ? உன் பெயர் என்ன?' என அலட்சியமாக ராவணன் கேட்டான். 'என் பெயர் அங்கதன். வாலியின் மகன் நான். சமாதானம் வேண்டி ராமனால் அனுப்பப்பட்ட தூதன் நான்' என்றான் அங்கதன். 'ராமனுடன் ஒருபோதும் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என ராவணன் கர்வமாகச் சொல்ல, 'மீண்டும் சொல்கிறேன். நீ இப்போதே ராமனுடன் சமாதானம் செய்துகொண்டு, அவர் மனைவியான ஸீதையை அவரிடமே சேர்த்துவிடு. என் பேச்சைக் கேளாவிடில் நீ மட்டுமின்றி, இலங்கையும் அழிந்து போகும் என எச்சரிக்கிறேன். அவன் மிக பலவான். அவனை உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.' என அங்கதன் மீண்டும் வேண்டினான்.
'நீ கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லாதவன். உனது தந்தையைக் கொன்றவன் ராமன் என்றறிந்தும், அதற்காக அவனைப் பழி வாங்காமல், அவனுக்கு உதவி செய்யவென இங்கு வந்திருக்கிறாயே. நீ உண்மையிலேயே ஒரு சரியான குரங்குதான்' என ராவணன் எள்ளி நகையாடினான். 'என் தந்தையை ராமன் கொன்றது உண்மைதான். ஆனால், அவரது அம்பினால் இப்போது அவர் சொர்க்கத்தில் சுகமாக இருக்கிறார்' என மகிழ்ச்சியுடன் அங்கதன் சொல்ல, வெறுப்புற்ற ராவணன் தனது காவலர்களை அழைத்து, அவனைப் பிடித்துக் கட்ட உத்தரவிட்டான். நான்கு காவலர்கள் அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அப்போது, தனது வாலினால், ராவணனைத் தாக்கி, அவனது மகுடம், குடை இவற்றை எடுத்துக்கொண்டு, அந்த நான்கு காவலர்களுடன், ஸுவேலாவுக்குத் தாவினான். அவன் வேகமாகக் குதித்தபோது, அவனைப் பிடித்துக் கொண்டிருந்த காவலர்கள் தரையில் மோதி மாண்டனர். 
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.