Tuesday, May 8, 2012

Rama Vijaya -Chapter- 40

ராம விஜயம் --40

அப்போது, விபீஷணன் கும்பகர்ணனை எதிர்த்துச் சண்டையிட வந்தான். தனது தம்பியைப் பார்த்ததும், ' நீ ஒரு நம்பிக்கைத் துரோகி. நான் யாரென உனக்குத் தெரியுமா? நான் உனது சகோதரன். நமது எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு, துரோகியாக மாறி, என்னுடனேயே சண்டைபோட வருகிறாய். இந்த நொடியே உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால், எங்களது ஈமச் சடங்குகளைச் செய்ய ஒருவன் இல்லாமல் போய்விடுவானே என நினைத்து, உனது உயிரை எடுக்காமல் விடுகிறேன். இந்த நிமிடமே இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு எனக் கட்டளை இடுகிறேன். மீண்டும் இனி உனது முகத்தை எனக்குக் காட்டாதே' என வெறுப்புடன் சத்தமிட்டான். கும்பகர்ணனின் ஆற்றலை நன்கறிந்திருந்த விபீஷணன், இந்த வார்த்தைகளைக் கேட்டதும், உடனே அங்கிருந்து மறைந்து விட்டான்.
கும்பகர்ணன் இப்போது, ராமன் மீது பாய்ந்தான். ராமன் அந்த அசுரன் மீது பல அம்புகளை எய்தான். ஆனால், அவற்றையெல்லாம் தனது கைகளாலேயே கும்பகர்ணன் அலட்சியமாக எதிர்கொண்டு தடுத்தான். இதைக் கண்ட ராமன், ஒரு கடுமையான அஸ்திரத்தை அவன் மீது எய்து, அவனது இரு கைகளையும் வெட்டித் தள்ளி, இன்னும் சில அம்புகளை எய்து, கும்பகர்ணனின் கால்கள், வயிறு, தலை முதலானவற்றை அறுத்தெறிந்தான். கும்பகர்ணன் போர்க்களத்தில் மாண்டு வீழ்ந்தான்.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்ட ராவணன் நிலைகுலைந்து வருந்தினான். இந்திரஜித் வந்து தனது தந்தையைத் தேற்றினான். அடுத்து ராவணனின் இரண்டாவது மகனான அதிகாயன் என்பவன் போர்க்களம் சென்று, ராம சேனையை எதிர்கொண்டு, தனது அம்புகளால் பல குரங்குகளைக் கொன்று குவித்தான். லக்ஷ்மணன் விட்ட ஒரு பாணத்தால் அவன் சாய்ந்தான். மகனை இழந்து வருந்திய ராவணனை மீண்டும் தேற்றித் தைரியம் கொடுத்த இந்திரஜித், தனது உடம்பு முழுவதும் மனிதர்கள் மற்றும் பசுக்களின் ரத்தத்தைப் பூசிக்கொண்டு, ஒரு யாகம் வளர்த்தான். அவன் செய்த யாகத்தால் மகிழ்ந்த அவனது இஷ்ட தேவதை அவனுக்கு ஒரு தேர், குதிரைகள் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் கொடுத்தாள். குதிரைகள் பூட்டிய அந்தத் தேரில் அமர்ந்து, இந்திரஜித் வானத்தில் பறந்து, மேகங்களுக்கு நடுவே தன்னை மறைத்துக்கொண்டு, சரமாரியாக அம்புகளை எய்து, வானரப் படையை துவம்சம் செய்தான். ராம, லக்ஷ்மணர்கள் கூட அவனது பாணங்களால் தாக்கப் பட்டு, மயங்கி வீழ்ந்தனர். வானரப் படைகளை அழித்து வெற்றியுடன் இலங்கைக்குத் திரும்பினான்.
வீழ்ந்து கிடந்த ராம, லக்ஷ்மணர்களையும், வானரப் படைகளையும் உயிர்ப்பிக்கவென, மூலிகைச் செடிகள் நிறைந்த துரோணகிரி என்னும் மலையைத் தேடிச் சென்றுக் கண்டுபிடித்து, மாருதி, அதன் அடிவாரத்தில் நின்றுகொண்டு, தன்னுடன் அப்போதே போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஸுவேலாவுக்கு வருமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான். அவனை அலட்சியத்துடன் பார்த்து, அந்த மலை, 'ஏ முட்டாளே, போய்விடு இங்கிருந்து. உன்னுடன் ஸுவேலாவுக்கு வருவேன் என நினைக்காதே. இடத்தைக் காலி செய்' என ஆணவத்துடன் சொன்னது. அதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாருதி, அந்த மலையை அப்படியே பெயர்த்தெடுத்துக்கொண்டு ஸுவேலாவுக்குப் பறந்து வந்தான். அந்த மலையில் இருந்த மூலிகைகளின் வாசம் பட்ட மறு கணமே ராம, லக்ஷ்மணர்களும், ஏனைய வானரர்களும் புத்துயிர் பெற்றெழுந்தனர்.
உயிர்த்தெழுந்த வானரர்கள் உடனே இலங்கையை நோக்கிப் பாய்ந்து சென்று, அதற்குத் தீ மூட்டினர். அவர்களைச் சமாளிக்க, சண்டப் பிரசண்டன், குரோசனன், நிகும்பன் என்னும் அசுரர்களை ராவணன் அனுப்பினான். அவர்கள் வருணாஸ்திரத்தைப் பிரயோகித்துப் பெருமழையைப் பெய்யச்செய்து, தீயை அணைத்தனர். அதே சமயம், இந்திரஜித் மந்திர சக்தியைப் பிரயோகித்து, க்ரித்யா எனும் ஒரு பெண்ணைப் படைத்து, அவளுடன் வானை நோக்கிப் பறந்து, அவள் பின்னால் ஒளிந்துகொண்டு, பாணங்களை எய்து வானரப் படையை நிர்மூலமாக்கினான். அப்போது, வாயு பகவான் ராமன் காதில் சொன்ன ஆலோசனையின் பேரில், ஆங்கிராஸ்திரம் எனும் ஒரு படையை ஏவி அந்தப் பெண்ணை இருகூறாகப் பிளந்தான். அதனால், இந்திரஜித் பூமிக்குத் திரும்பி, ராமனின் படைகளுக்கு அதிகச் சேதம் விளைவித்து, வெற்றியுடன் இலங்கைக்குத் திரும்பினான். என்ன செய்வதெனத் தெரியாமல் பயந்து நடுங்கிய வானரர்களுக்கு மாருதி தைரியம் சொல்லி, மீண்டும் போருக்குத் தயாராகச் செய்தான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.