Thursday, May 17, 2012

Rama Vijaya -Chapter-49


 ராம விஜயம் -- 49






--------------------------------------------------------------------

மீண்டெழுந்த லக்ஷ்மணனும், ராமனும், இதர வானரப் படைகளும் ராவணனை எதிர்கொள்ளத் தயாராய் நின்றனர். ஆனால், ராவணனை மட்டும் எங்குமே காணோம். அப்போது, விபீஷணன் வந்து, இந்திரஜித் செய்தது போலவே ஒரு கடும் யாகத்தை ராவணன் செய்து வருவதாகவும், முன்பு போலவே ஒரு திவ்ய ரதம் வரத் தொடங்கி விட்டது எனவும் தெரிவித்தான். இப்போதே வானரர்களை அனுப்பி, யாகத்தை அழிக்காவிட்டால், ராவணனை வெல்வது கடினம் எனவும் சொன்னான். அதைக் கேட்டதும், மாருதி, நீலன், சுக்ரீவன் முதலானோரை இலங்கைக்கு ராமன் அனுப்பினான்.
அவர்களும் இலங்கைக்கு உடனே சென்று, எங்கெங்கு தேடியும் ராவணன் மறைந்திருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. அப்போது, விபீஷணனின் மனைவி ஸர்மா அவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றிய தகவலைச் சொன்னாள். அதன் படியே வானரர்களும் அங்கு சென்று, அந்தப் பள்ளத்தை மூடி மறைத்திருந்த கல்லை அகற்றினர்.
அவர்கள் அந்தப் பள்ளத்துக்குள் சென்றபோது, ராவணன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். யாகத்தையும், ரதத்தையும் அழித்த வானரர்கள் எவ்வளவோ முயற்சித்தும், தியானத்தில் இருந்த ராவணனை எழுப்ப முடியவில்லை. ஆயுதங்களால் அடித்தும், மரங்களை அவன் மீது எறிந்தும், கைகளால் அறைந்தும் ராவணனின் தவத்தைக் கலைக்க முடியவில்லை. அப்போது, சுக்ரீவன் மண்டோதரியைப் பிடித்து அவன் முன்னே கொண்டு வந்தான். பயந்துபோன மண்டோதரி ஓங்கிய குரலெடுத்து அழுதாள். அவளது கதறல் ராவணனை நிலைக்குக் கொண்டு வந்து, அவன் கண் விழித்தான். தனது யாகமும், ரதமும் அழிந்துபோனதைக் கண்ட ராவணன் கோபமுற்று வானரர்களை எல்லாம் அடித்து விரட்டினான். வானரர்களும் அங்கிருந்து தப்பி, ராவணனையும், மண்டோதரியையும் அந்தப் பள்ளத்திலேயே விட்டுவிட்டு ஸுவேலாவுக்கு ஓடினர்.
மண்டோதரியைப் பார்த்து, ராவணன், ' என் அன்பு மனைவியே, இங்கு நடந்தது குறித்து வருத்தப்படாதே. வருத்தமும், மகிழ்வும் நம்மைப் போன்ற அழியும் பிறவிகளுக்கெனவே உண்டானது. அவை வரும்போது, அவற்றையெல்லாம் அதன்படியே அனுபவித்தாக வேண்டும். இப்போது நான் ராமனுடன் போரிடச் செல்லப் போகிறேன். ராமனைக் கொல்வேன்; அல்லது அவன் கைகளில் மாண்டு போவேன். நான் திரும்பி வந்தால் நல்லது. ஒருவேளை நான் கொல்லப்பட்டால், இதுவே நான் உனக்கு உரைக்கு இறுதி வார்த்தைகள்.'எனச் சொல்லிவிட்டு, எஞ்சியிருந்த அசுரர்களைத் திரட்டிக்கொண்டு, போருக்குச் சென்றான்.
அவன் மீது வானரர்கள் பல மலைகளையும், மரங்களையும், பாறாங்கற்களையும் எறிந்தனர். ஆனால், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு ராவணன் முறியடித்தான்.
வானரர்களால் ராவணனை வெல்ல இயலாது என்றுணர்ந்த ராமன், தானே அவனுடன் போரிடச் சென்றான். அப்போது ராவணன் நாகாஸ்திரத்தை எய்து, அதன் மூலம் பல பாம்புகளை உருவாக்கி, வானரர்களைத் தாக்கினான்.
ராமன் கருடாஸ்திரத்தால் அதை முறியடித்து அந்த ஸர்ப்பங்களை அழித்தான்.
வருணாஸ்திரத்தை அனுப்பி, அசுரர்களை ராமன் வாட்ட, வாயு அஸ்திரத்தால் ராவணன் அதைத் தடுத்தான்.
மலைகளை உருவாக்கும் அஸ்திரத்தால், அந்தக் காற்றை ராமன் எதிர்கொண்டு அதைச் செயலிழக்கச் செய்தான்.
ஆனால், வஜ்ராயுதத்தால் அந்த மலைகளை ராவணன் பொடிப்பொடியாக்கினான்.
ஒரே சமயத்தில் பல அம்புகளைப் பொழியும் அஸ்திரத்தை ராவணன் ஏவ, ஒரே அஸ்திரத்தால் அவையனைத்தையும் ராமன் தவிடுபொடியாக்கினான்.
ஒரு வலிய அஸ்திரத்தால் ராமனின் இடது காலை ராவணன் தாக்க, அதைக் கண்டு ஆத்திரமடைந்த வானரர்கள் அவன் மீது பலவிதமாகக் கற்களையும், மரங்களையும், ஆயுதங்களையும் எறிய, அவற்றையெல்லாம் ராவணன் செயலிழக்கச் செய்தான்.
ராவணன் தனது தேரிலிருந்தும், ராமன் தரையில் நின்றுகொண்டும் போர் புரிந்தனர். இதைக் கண்ட இந்திரன் வானத்திலிருந்து, தனது தேரை ராமனுக்கென அனுப்பினான். அதன் மீதேறி, ராமன், ராவணனுடன் கடும் யுத்தம் செய்தான். சம வலிமையுள்ள அவர்கள் இருவரும் தொடர்ந்து ஏழு இரவுகள், ஏழு பகல்கள் இடைவிடாது சமரிட்டனர்.
ராமன் நான்கு அம்புகளை எய்து, ராவணனின் தேர்க் குதிரைகளைக் கொன்றான். உடனே வேறு குதிரைகளை அதில் பூட்டி, ராவணன் போரிட, ராமன் அரைச் சந்திரன் வடிவில் ஒரு அஸ்திரத்தை எய்து தாக்கினான். அதே போல இன்னொரு அஸ்திரத்தை ராவணன் எய்து அதை எதிர்கொண்டான்.
வலிமையான ஒரு அஸ்திரத்தால் ராவணனின் பத்துத் தலைகளையும் ராமன் வெட்டி வீழ்த்தினான். ஆனால், அனைவரும் வியக்கும் வண்ணன்ம், அந்தத் தலைகள் மீண்டும் வந்து ராவணனின் உடலில் பொருத்திக் கொண்டன. மீண்டும் இன்னுமொரு அம்பினால், அவற்றை வெட்ட, மீண்டும் அவை ராவணனின் உடலோடு பொருந்தின.
இதைக் கண்ட ராமனும், மற்ற வானரங்களும் அதிர்ச்சி அடைய, அப்போது, ராமனின் தேரோட்டியாக அமர்ந்திருந்த மாதுலி என்பவன், 'ராவணனின் மார்பகத்தில் அமிர்தம் நிறைந்திருக்கிறது. அதனால்தான், நீ எவ்வளவு முறை வெட்டியும், அந்தத் தலைகள் மீண்டும் பொருந்திக் கொள்கின்றன. எனவே, அவனது மார்பைக் குறி வைத்து, அம்பினை எய்து, அந்த மர்ம ஸ்தானத்தை அழித்துவிடு. அப்போது இது நிகழாமல் தடுக்கப்படும்' என ஆலோசனை சொல்ல, அகஸ்தியர் முன்னம் அருளித் தந்த ஒரு அஸ்திரத்தை ராவணன் மீது ஏவி, அமிர்தம் சுரந்திருக்கும் மார்பினைத் தாக்கி, உடனேயே அவனது தலைகளை அறுக்க, ராவணன் உயிரற்ற சடலமாய்த் தரையில் வீழ்ந்தான்.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு, மண்டோதரியும், இதர மனைவிகளும் போர்க்களத்துக்கு ஓடிவந்து ராவணன் உடல் மீது விழுந்து ஓலமிட, விபீஷணன் அவர்களைத் தேற்றி, அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். தனது அண்ணனின் ஈமச் சடங்குகளையும் விபீஷணன் முறையாகச் செய்தான். அதன் பின்னர், விபீஷணனை இலங்கைக்கு அதிபனாய் ராமன் முடி சூட்டினான். அனைத்து அசுரர்களும் விபீஷணனை அரசனாக ஏற்று, அவன் அடி பணிந்தனர். சிறைப்பட்டிருந்த அனைத்துத் தேவர்களும், அரசர்களும் விடுவிக்கப் பட்டனர். ராமன் அவர்களைச் சென்று பார்த்து, அன்புடன் அவர்களைத் தழுவிக் கொண்டான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.