Monday, April 2, 2012

Rama Vijaya- Chapter-9

ராம விஜயம்- 9


பிரம்மதேவருக்கு அஹல்யா எனும் ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்துகொள்ள எத்தனையோ அரசர்களும், தேவர்களும் போட்டி போட்டனர். ஆனால், யாரொருவர் ஆறு மணி நேரத்துக்குள் இந்தப் பூவுலகைச் சுற்றி வருகிறார்களோ, அவருக்கே தன் மகளைக் கொடுப்பதாக பிரம்மதேவர் நிபந்தனை வைத்தார். இந்திரன் உட்பட தேவர்களும், ராஜாக்களும் அப்படியே செய்ய முற்பட, எவராலும் முடியவில்லை. கௌதமர் என்னும் ரிஷி ஒருவர் மட்டும் இதைச் செய்து காட்டினார். நிபந்தனைப்படி அஹல்யாவையும் மணந்தார். இந்திரன் மட்டும் பொறாமையால் வாடி, எப்படியாவது அகலிகையை அடைய வேண்டும் எனத் துடித்தான்
திருமணம் முடிந்து சில காலத்திற்குப் பிறகு, ஒரு நாள் கிரஹண புண்யகாலத்தன்று, தர்ப்பணம் செய்வதற்காக இருவரும் பிற ரிஷிக்களுடன் ஒரு நதிக்கரைக்குச் சென்றனர். தர்ப்பணம் செய்து முடித்ததும், கௌதமர் மற்ற முனிவர்களுடன் தியானத்தில் அமர, அஹலிகை தனது இல்லத்திற்குத் திரும்பினாள். அவள் தனியே இருக்கும் இந்த வேளையைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கௌதமரின் உருவெடுத்து, அகலிகையுடன் தகாத உறவு கொண்டான். அந்த நேரத்தில் கௌதமர் திரும்பிவர, நடந்ததை அறிந்து வெகுண்டு இருவரையும் சபித்தார். ஆயிரம் புண்களைத் தன் உடலில் தாங்கிய ஒரு மயில் உருவாகிப் போகுமாறு இந்திரனையும், அஹல்யா அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு கல்லாகிப் போகுமாறும் சாபம் கொடுத்தார். ஆனால், இந்தத் தவற்றுக்கு அவள் மீது காரணம் இல்லை என்பதால், ராமனின் பாதம் அந்தக் கல்லின் மீது படும்போது, அவளுக்குச் சாப விமோசனம் ஆகித் தன்னை வந்து சேர்வாள் எனும் பரிகாரமும் தந்தார்.
இப்படி உடலெல்லாம் புண்ணான ஒரு மயிலாகக் காடுகளில் வாடும் இந்திரன் நிலையைக் கண்டு வருந்திய தேவர்கள் கௌதமரை வணங்கி சாபத்தைக் குறைக்குமாறு வேண்டினர். அவர்கள் வேண்டுகோளுக்கிண‌ங்கி கௌதமர், இந்திரனை மீண்டும் அவனது சுய உருவுக்கே மாற்றி, புண்களெல்லாம் ஆயிரம் கண்களாகுமாறுச் செய்தார்.
அஹலிகையின் சாபவிமோசனத்துக்குப் பின்னர், ராம,லக்ஷ்மணரை அழைத்துக்கொண்டு விஸ்வாமித்ரர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அஹலிகையின் மகனும், ஜனகர் என்னும் மன்னனின் புரோஹிதருமான ஸதானந்தர் என்பரும் அவர்களுடன் சென்றார். மிதிலை நகரை அடைந்து அங்கு ஒரு பர்ணசாலை அமைத்து அதில் தங்கினர். அப்போது, ராமன் கேட்டதற்கிணங்க, ஜனகரின் மகளான ஸீதை என்பவளின் வரலாறை விஸ்வாமித்ரர் சொல்லலானார்:-
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.